குடியரசுத் தலைவர் வருகையையொட்டி, உதகை தீட்டுக்கல்லில் சீரமைக்கப்பட்டுவரும் ஹெலிகாப்டர் இறங்கு தளம். படம்: ஆர்.டி.சிவசங்கர் 
Regional02

குடியரசுத் தலைவர் வருகையையொட்டி உதகையில் சிறப்பு ஏற்பாடுகள் தீவிரம் :

செய்திப்பிரிவு

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வரும் 3-ம் தேதி உதகை வருவதையொட்டி முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நீலகிரி மாவட்டம், குன்னூரை அடுத்த வெலிங்டன் ராணுவக் கல்லூரி அதிகாரிகள் பயிற்சி மையத்தில், ஆக. 4-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொள்கிறார். இதற்காக, கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக வரும் 3-ம் தேதி அவர் உதகை வருகிறார். அங்கு, ராஜ்பவனில் தங்குகிறார்.

5-ம் தேதி உதகையில் உள்ள சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட இருக்கிறார். இதையொட்டி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் உதகைக்கு வருகிறார்.

குடியரசுத் தலைவர் வருகையையொட்டி உதகை தாவரவியல் பூங்காவில் இருந்து ராஜ்பவனுக்கு செல்லும் சாலை சீரமைக்கப்பட்டு வருகிறது. அந்த சாலையில் உள்ள புதர் செடிகளை நகராட்சி ஊழியர்கள் வெட்டி அகற்றி வருகின்றனர். சாலையில் படிந்து காணப்படும் மண் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.

அரசு தாவரவியல் பூங்காவில் சுத்தம் செய்யும் பணி, புற்களை அழகாக வெட்டும் பணி நடைபெற்று வருகிறது. ராஜ்பவனிலும் தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தீட்டுக்கல் பகுதியில் உள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளம் சீரமைக்கப்பட்டு வருகிறது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT