Regional02

ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி :

செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டம் உதகை வால்சம் சாலையில் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி உள்ளது. இந்த வங்கி வளாகத்தில் ஏடிஎம் மையம் உள்ளது. வங்கிஅதிகாரிகள் ஏடிஎம் மையத்தை நேற்று காலை ஆய்வு செய்தபோது, நேற்று முன்தினம் இரவு கொள்ளை முயற்சி நடந்தது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக அளித்தபுகாரின் பேரில், அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை பி-1 காவல்நிலைய உதவி ஆய்வாளர் ரவி மற்றும் போலீஸார் ஆய்வு செய்தனர். மேலும், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

போலீஸார் கூறும்போது, "உதகை வால்சம் சாலையில் இரவு நேரங்களில் அதிக மக்கள் நடமாட்டம்இருப்பதில்லை. இதைப் பயன்படுத்தி மர்ம நபர்கள் ஏடிஎம் மையத்துக்குள் புகுந்து, வெல்டிங் கருவி உதவியோடு இயந்திரத்தில் துளையிட்டு பணத்தை திருட முயன்றுள்ளனர். ஆனால், அவர்களால் இயந்திரத்தை உடைக்க முடியாததால் தப்பிச் சென்றுள்ளனர்.

வங்கிக்கு வெளியில் உள்ள கண்காணிப்பு கேமரா மட்டுமே இயங்குகிறது. ஏடிஎம் மையத்துக்குள் இருந்த கேமரா பழுதாகியுள்ளது. ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் கொள்ளை போகவில்லை. இருப்பினும், பணம் நிரப்பும் பணியை மேற்கொண்டுவரும் தனியார் நிறுவனத்தினரிடமும் விசாரணை நடந்து வருகிறது" என்றனர்.

SCROLL FOR NEXT