பயிர்க்கடன் பெற வரும் விவசாயிகளை அலைக்கழிக்காமல், பழைய நடைமுறைப்படி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்க வேண்டும், என தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் சுதந்திரராசு கூறியதாவது:
பவானிசாகர் அணை 100 அடியை எட்டிய நிலையில், இப்பகுதி விவசாயிகளுக்கு பயனில்லாமல் உபரிநீர் வெளியேறுகிறது. எனவே, உடனடியாக கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு நீர் திறக்க வேண்டும். தற்போது அனைத்து பகுதிகளிலும் விவசாய நடவு பணி தொடங்கியுள்ள நிலையில், விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் எளிதாக பயிர்க்கடன், உரம் போன்றவை வழங்க வேண்டும்.
இதுவரை விவசாயிகள் கடன் பெற விஏஓ சான்று மற்றும் நிலத்தின் கணினி பட்டா மற்றும் ஆர்.எஸ்.ஆர். நகல் கொடுத்ததும் உரிய ஆய்வு செய்து கடன் வழங்கப்பட்டது. ஆனால், தற்போது புதிதாக நிலத்திற்கான அடங்கல், பிற வங்கியில் தடையில்லா சான்று வழங்க வேண்டும் என தினமும் ஒரு காரணம் சொல்லி விவசாயிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
எனவே, அரசு பயிர்க்கடன் வழங்குவதில் தனிகவனம் செலுத்தி பழைய நடைமுறையை பின்பற்றி, நில உரிமைப்பட்டா, விஏஓ சான்று வழங்கும் விவசாயிகளுக்கு உடனடியாக பயிர்க்கடன் வழங்க வேண்டும், என்றார்.