திருச்செந்தூர் பேரூராட்சிப் பகுதியில் பாதாளச் சாக்கடைத் திட்டத்தில் இணைப்பு வழங்குவதற்கு அரசு ரூ. 2.63 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக, திருநெல்வேலி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் பா.குற்றாலிங்கம் தெரிவித்தார்.
திருச்செந்தூர் பேரூராட்சியில் பாதாளச்சாக்கடைத் திட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள 4,170 இணைப்புகளில், இதுவரை 330இணைப்புகளே கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, நூறு சதவீதஇணைப்பை சாத்தியப்படுத்து வதற்கான ஆலோசனைக் கூட்டம், திருநெல்வேலி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் பா.குற்றாலிங்கம் தலைமையில் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
பின்னர், செய்தியாளா்களிடம் குற்றாலிங்கம் கூறியது: திருச்செந்தூர் பேரூராட்சிக்கான பாதாளச் சாக்கடை திட்டத்தில் வீட்டு கழிவு நீர் குழாய் இணைப்பு வழங்குவதற்கு ரூ. 2.63 கோடியில் பணிகள் மேற்கொள்ள நிா்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. அதற்கான ஒப்பந்தப்புள்ளி ஆகஸ்ட் 18-ம் தேதி கோரப்பட்டு, செப்டம்பர் 1-ல் குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு இணைப்புவழங்கும் பணி தொடங்கும். வணிகநிறுவனங்கள், குடியிருப்புகள் அதற்கான முன் வைப்புத் தொகை மற்றும் இணைப்புக் கட்டணத்தை எளிய தவணை முறையில் செலுத்தலாம்.
முதற்கட்டமாக 4,170 இணைப்புகளும், பின்னர் குமாரபுரம், ஆலந்தலை ஆகிய விடுபட்ட பகுதிகளிலும் இணைப்பு வழங்கப்படும். திருச்செந்தூர் மக்களுக்கு கூடுதல் குடிநீா் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.
தூத்துக்குடி மாவட்ட பேரூராட்சிகள் உதவிச் செயற்பொறியாளர் வாசுதேவன்,பாதாளச் சாக்கடைத்திட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் சு.கு சந்திரசேகரன்,தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெற்கு மாவட்டத் தலைவர் ரெ.காமராசு, அனைத்து வியாபாரிகள் சங்கச் செயலாளர் அ.துரைசிங், நாடார்வியாபாரிகள் சங்கச் செயலாளர் செல்வக்குமார், விடுதி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அருள்நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.