தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆய்வு நடத்தினார். மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர் கோ.பிரகாஷ், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். படம்: என்.ராஜேஷ் 
Regional02

தூத்துக்குடியில் 25 ஏக்கரில் வர்த்தக மைய அரங்கம் : அமைச்சர் கீதாஜீவன் தகவல்

செய்திப்பிரிவு

`தூத்துக்குடியில் 25 ஏக்கர் பரப்பளவில் வர்த்தக மைய அரங்கம் அமைக்கப்படும்’ என, தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் நேற்று தெரிவித்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார். ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பின்னர், அமைச்சர் கூறியதாவது:

தமிழக முதல்வரின் சிறப்பான நடவடிக்கையால் கரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியில் தற்போது சில பகுதிகளில் தினசரியும், சில பகுதிகளில் ஒரு நாள்விட்டு ஒரு நாளும், மேலும் சிலபகுதிகளில் 3 நாட்களுக்கு ஒருமுறையும் குடிநீர் வழங்கப்படுகிறது. இதனை முறைப்படுத்தி அனைத்து பகுதிகளிலும் தினசரி குடிநீர் வழங்கும் திட்டம் ஒன்றரை ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும்.

தூத்துக்குடியில் கடந்த 2007-ம்ஆண்டு தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டப்பணி நீண்ட காலமாக முடிவடையாமல் உள்ளது. இன்னும் 6 மாத காலத்தில் பணிகளை முழுமையாக முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கும் பாதாள சாக்கடை திட்டத்தை விரிவுபடுத்த ரூ.100 கோடியில் திட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரிக்கு எதிரே உள்ள இடத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் பெரிய அளவில் வர்த்தக மைய அரங்கம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தொழில் வர்த்தக கண்காட்சிகள், ஏற்றுமதி கண்காட்சிகள், வர்த்தக கூட்டங்கள் போன்றவற்றுக்கு இது பயன்படும். அம்பேத்கர் நகர் பகுதியில் ரூ.25 கோடி மதிப்பில் அறிவியல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கவும், விவிடி மேல்நிலை நீர்தேக்க தொட்டி பூங்கா அருகே பல்நோக்கு பயன்பாட்டு அரங்கம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர்.

மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலரான தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் கோ.பிரகாஷ், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஸ்ருதஞ் ஜெய் நாராயணன், மாநகராட்சி தலைமை பொறியாளர் சேர்மக்கனி, உதவி செயற்பொறியாளர் சரவணன், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் செந்தூர்பாண்டியன், மாநகராட்சி நகர்நல அலுவலர் வித்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT