Regional02

பஞ்சு மெத்தை கிடங்கில் தீ விபத்து :

செய்திப்பிரிவு

திருப்பூர் அருகே பஞ்சு மெத்தை கிடங்கில் நேற்று நிகழ்ந்த தீ விபத்தில், பல லட்சம் மதிப்பிலான பஞ்சு பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் கபீர் குட்டி. இவர், 15 ஆண்டுகளாக திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ராம் என்பவருக்கு சொந்தமான இடத்தில் பஞ்சு மெத்தை கிடங்கு நடத்தி வருகிறார். பஞ்சை விலைக்கு வாங்கி வந்து, அதனை மெத்தையாக தயாரித்து விற்பனை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து, கபீர் குட்டி மற்றும் அவரது பணியாளர்கள் உறங்க சென்றுள்ளனர்.

நேற்று காலை கிடங்கை திறக்க வரும்போது, புகை வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். திருப்பூர் வடக்கு போலீஸாருக்கு தகவல் அளித்தனர். மேலும், திருப்பூர் தெற்கு தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்கும் பணியில்ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தீ எரிந்துள்ளது. பஞ்சு கிடங்கு என்பதால், தீயை அணைக்கும் பணியில் சற்று தாமதம் ஏற்பட்டது. இருப்பினும், ஒரு மணி நேரப் போராட்டத்துக்கு பிறகு தெற்கு தீயணைப்பு அலுவலர் ஆர். சண்முகம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், முற்றிலுமாக தீயை அணைத்தனர். இதன் அருகே, சுமார் 200 மீட்டர் தொலைவில் சமையல் எரிவாயு உருளை கிடங்குஇருந்ததால் பெரும் விபத்துதவிர்க்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. வடக்கு போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT