ஈரோடு சோலாரில் புதிய பேருந்து நிலையம் அமையவுள்ள இடத்தில் வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார். 
Regional01

ஈரோடு சோலார் பகுதியில் 20 ஏக்கரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் : வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி தகவல்

செய்திப்பிரிவு

ஈரோடு சோலார் பகுதியில் 20 ஏக்கரில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.

ஈரோடு மாநகராட்சி மாருதி நகரில் புதிய தார்சாலை அமைக்கும் பணி தொடக்கம் மற்றும் சோலார் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடத்தைவீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஈரோடு நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சோலார் பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான 54 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 20 ஏக்கர் நிலத்தில், நவீன வசதிகளுடன் புறநகர் பேருந்து நிலையம் அமைக்க ஆய்வு நடந்து வருகிறது. தற்போது செயல்படும் பேருந்து நிலையத்தில் நகர பேருந்துகள் மட்டும் நிறுத்த ஏற்பாடு செய்யப்படும்.

மேலும், இப்பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பெரிய மார்க்கெட் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஈரோடு மஞ்சள் வளாகம் 15 ஏக்கரில் விரிவுபடுத்தப்படும். ஈரோட்டில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு அரங்கம், சட்டக்கல்லூரி, வேளாண் கல்லூரி, டெக்ஸ்டைல் பல்கலைக்கழகம் அமைப்பது போன்ற 82 திட்டங்களைச் செயல்படுத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மொடக்குறிச்சியில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடக்கிறது. ஈரோட்டிலிருந்து செல்லும் அனைத்து சாலைகளையும் விரிவாக்கம் செய்வதற்கும், ரயில்வே பாலங்களை சீரமைத்து போக்குவரத்தை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். குடிசைகளில் வசிக்கும் மக்களுக்கு நிரந்தரமாக வீடு கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அம்பேத்கர் சிலை அமைக்கவும், சுதந்திரப்போராட்ட வீரர் பொல்லான் நினைவிடம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். தியாகி குமரன் பெயரில் சாலை அமைக்கப்படும். பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாநகராட்சியில் வாட்ஸ் அப் மூலம் புகார் பெறும் திட்டத்தில், குறுகிய காலத்தில் 117 புகார்கள் வரப்பெற்று, அதில் 93 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி, மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT