இந்த ஆண்டு கூடுதலாக ரூ.2 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
ஈரோட்டில் நேற்று முன்தினம் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராம, நகர தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில், புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, கடன் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ரூ.9 ஆயிரத்து 500 கோடி பயிர்க்கடன் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு கூடுதலாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்கப்படும்.
கடந்த ஆட்சிக்காலத்தில், பயிர்க் கடன் பெற்றோர் பட்டியல் அவசர கோலத்தில் தயாரிக்கப்பட்டு, ரூ.12 ஆயிரத்து 100 கோடி தள்ளுபடி செய்ததாக அறிவித்தனர். இதில், ரூ.5 ஆயிரம் கோடிதான் ஒதுக்கீடு செய்துள்ளனர். வரும் நிதிநிலை அறிக்கையில் இதற்கான அறிவிப்பு வரும். முறையாக பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளதா, தவறு நடந்துள்ளதா என ஆய்வு நடந்து வருகிறது. இதில், பயிரே செய்யாத தரிசு நிலத்துக்கான கடனுக்கு தள்ளுபடி செய்ததாக புகார் வந்துள்ளது. கடன் தள்ளுபடிக்கு 76 சதவீதம் விவசாயிகளுக்கு ரசீது வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.