சேலம் சுகவனேஸ்வரர் கோயில் அருகேயுள்ள கூட்டுறவு பல்பொருள் அங்காடியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார். உடன் கூட்டுறவுத் துறை பதிவாளர் சண்முகசுந்தரம், ஆட்சியர் கார்மேகம், எம்எல்ஏ ராஜேந்திரன் உள்ளிட்டோர். படம்: எஸ்.குரு பிரசாத் 
Regional01

ரேஷன் கடைகளில் - பயோ-மெட்ரிக் குறைபாடுகள் தொடர்பாக ஆய்வு : கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

செய்திப்பிரிவு

ரேஷன் கடைகளில் பயோ-மெட்ரிக் குறைபாடுகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம், சேலம் ஆட்சியர் கார்மேகம், எம்எல்ஏ-க்கள் ராஜேந்திரன், அருள், சதாசிவம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்துக்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமை வகித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் நடப்பாண்டில் (2021-22) விவசாயிகளுக்கு ரூ.11 ஆயிரத்து 500 கோடி பயிர்க் கடன் வழங்கவும், உரிய நேரத்தில் உரங்கள் வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். ரேஷன் கடைகளில் விற்பனையாளர், உதவியாளர் உள்ளிட்ட 3 ஆயிரத்து 997 காலிப்பணியிடங்களை அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த தகுதியானவர்களைக் கொண்டு நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

பயிர்க் கடன் தள்ளுபடியைப் பொறுத்தவரையில், பல்வேறு புகார்களின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள 4 ஆயிரத்து 451 விவசாய கடன் சங்கங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுய உதவிக் குழுக்களுக்கு அதிகபட்சமாக கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கரோனா நிவாரண நிதியாக, 2.11 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ.4 ஆயிரமும், 14 வகை மளிகைப் பொருட்களும் வழங்கப்பட்டன. இப்பணி 99 சதவீதம் நிறைவடைந்துள்ளது. ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கவும், அனைத்து பொருட்கள் கிடைக்க ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாதம் 30 நாட்களும் பொருட்கள் வழங்கப்படும்.

கூட்டுறவு கடன் சங்கங்கள், பல்நோக்கு பணி மையமாக விரிவுபடுத்தப்படும். கூட்டுறவு கடன் சங்கங்களில், நிலம் இல்லாதவர்கள், 18 வயது நிரம்பிய மாணவர்கள், பெண்கள் என அனைவரையும் உறுப்பினராக சேர்க்க வேண்டும். மாணவர்கள் படித்து முடித்தவுடன், வேலைவாய்ப்பின்றி உள்ளனர். அவர்கள் தொழில் தொடங்க, கூட்டுறவு சங்கத்தில் கடனுதவி வழங்க முடியும்.

கூட்டுறவு மருந்துக் கடைகளில் தரமான மருந்துகளை குறைந்த விலைக்கு வழங்குவதில் அரசு உறுதியாக உள்ளது. கூட்டுறவு சங்கத் தேர்தல் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத் திருத்தம் பொருந்தாது என 2 நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கூட்டுறவு என்பது மாநில உரிமையைப் பொருத்தது.எனவே, விரைவில் சட்ட வல்லுநர்களை கலந்து ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும்.

மாநில கூட்டுறவு வங்கி மூலம் ரூ.2,500 கோடி வழங்கி பயிர் கடன் அளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ரேஷன் கடைகளில் பயோ-மெட்ரிக் குறைபாடுகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில், அதில் உள்ள குறைபாடுகள் முழுமையாக நீக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT