பாஸ்போர்ட், விசா இல்லாமல் பெருந்துறையில் வேலைபார்த்து வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 10 பேரை போலீஸார் கைது செய்து சென்னை புழல் சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் ஏராளமான வடமாநிலத்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் குற்றப்பின்னணி உள்ளவர்கள் கலந்துள்ளனரா என்பது குறித்து போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பெருந்துறை சிப்காட் பகுதியில் பணிபுரியும் வடமாநிலத்தவர்களில், வங்க தேசத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீஸார் சோதனை நடத்தினர்.
இதில், வங்கதேசத்தைச் சேர்ந்த முகமது மொட்டி ரகுமான் (52), முகமது சொராத் காஜி (40), ரபூல் காஜி (20), முகமது மோக்சத் அலி (43), முகமது அன்சாரி ரகுமான் (32), மொனி ரூல் இஸ்லாம் (32), முகமது சபிக்குல் இஸ்லாம் (40), முகமது அஸ்ரம் உஸ்மான் (28), ஹாரிபுல் இஸ்லாம்(28), சபுல்இஸ்லாம் (41) ஆகிய 10 பேர் தங்கி இருப்பது தெரியவந்தது.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், வங்கதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர்கள், சட்டவிரோதமாக மேற்கு வங்கத்தில் குடியேறியதாகவும், அங்கிருந்து இப்பகுதிக்கு வந்து கட்டிடத் தொழிலாளிகளாக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. பாஸ்போர்ட், விசா போன்ற ஆவணங்கள் இல்லாமல் இங்கு தங்கியிருந்த 10 பேரையும் கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறைக்கு அனுப்பி வைத்தனர்.