Regional02

தூத்துக்குடி பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு :

செய்திப்பிரிவு

`தூத்துக்குடி பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்’ என, மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர் கோ.பிரகாஷ் அறிவுறுத்தினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் கரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வளர்ச்சி திட்டங்களின் சிறப்பு கண்காணிப்பு அலுவலரான, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் கோ.பிரகாஷ் தலைமை வகித்து, பேசியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்தாலும், தினசரி பரிசோதனை தொடர்ந்து 3,000 என்ற அளவிலேயே இருக்க வேண்டும். தீவிரமாக தடுப்பூசி போட வேண்டும். 3-வது அலையை எதிர்கொள்ளத் தயாராகஇருக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் கரோனா களப் பணியாளர்களை அதிகமாக நியமித்து 2 தினங்களுக்கு ஒருமுறை வீடு வீடாகச் சென்று காய்ச்சல், கரோனா அறிகுறிகள் குறித்து கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும்.

பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு மூலம் தடுப்பணை கட்டும் பணிகளை குறித்த காலத்துக்குள் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி பாதாள சாக்கடை திட்டப் பணிகளை தினசரி ஆய்வு செய்து விரைந்து முடிக்க வேண்டும். குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் நடைபெற்று வரும் 248 குடியிருப்பு கூட்டு குடிநீர் திட்டப் பணி, பொதுப்பணித்துறை சார்பில் நடக்கும் திருச்செந்தூர் யாத்திரை நிவாஸ் பணி, ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி, குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டுமானப் பணி ஆகியவற்றை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் தங்களது துறையின் மூலம் நடைபெற்று வரும் பணிகளை தினசரி ஆய்வு மேற்கொண்டு விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

வாழைநார் மூலம் தயாரிக்கப்பட்ட பல்வேறு பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்டார். மாவட்ட வன அலுவலர் அபிசேக் டோமர், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT