தூத்துக்குடி அரசு தொழிற் பயிற்சி நிலைய துணை இயக்குநர் மற்றும் முதல்வர் எஸ்.பழனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி, திருச்செந்தூர், வேப்பலோடை, நாகலாபுரம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) சேர இணையதளம் மூலமாக 4.8.2021 வரைவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 8-ம் வகுப்பு மற்றும் 10- வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் கார்டு, புகைப்படம் மற்றும் சிறப்புநிலை முன்னுரிமைச் சான்றிதழ்கள் இருப்பின் அனைத்தையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.50.
விண்ணப்பதாரரின் மதிப்பெண் மற்றும் இன ஒதுக்கீட்டின்படி தரவரிசைப்பட்டியல் இதே இணையதளத்தில் வெளியிடப்பட்டு, அதற்கேற்ப ஒதுக்கப்பட்ட தேதிகளில் அரசு விதிகளுக்கு உட்பட்டு ஆன்லைன் கலந்தாய்வு வாயிலாக சேர்க்கை நடைபெறும்.
மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது தங்களது சரியான செல்பேசிஎண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிட வேண்டும். கலந்தாய்வு நடைபெறும் விவரங்கள் அனைத்தும் குறுந்தகவல்களாக மட்டுமே அனுபப்பப்படும் என்பதால் இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் பயிற்சியாளர்களுக்கு தமிழக அரசால் மாதம் தோறும் உதவித்தொகை ரூ.750, கட்டணமில்லா பேருந்து சலுகை, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா மடிக்கணினி, விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் வரைபடக் கருவிகள், விலையில்லா சீருடை, விலையில்லா காலணி மற்றும் பயிற்சிக்கு தேவையான நுகர்பொருட்கள் வழங்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி நிலைய துணை இயக்குநர் மற்றும் முதல்வரை 0461-2340133 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.