ஜவ்வரிசியில் கலப்படத்தை தடுக்க உற்பத்தியாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் கண்காணிப்புக் குழு கூட்டம் நடந்தது. இதில், ஆட்சியர் கார்மேகம் பேசினார். உடன் சேகோ சர்வ் இயக்குநர் பத்மஜா உள்ளிட்டோர். 
Regional01

கலப்படமில்லா ஜவ்வரிசி உற்பத்தியை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் : கண்காணிப்புக் குழு கூட்டத்தில் சேலம் ஆட்சியர் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

ஜவ்வரிசி ஆலைகளில் கலப்படமின்றி ஜவ்வரிசி உற்பத்தி செய்வதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என கண்காணிப்புக் குழு கூட்டத்தில் சேலம் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

ஜவ்வரிசி மற்றும் மரவள்ளிக் கிழங்கு மாவு ஆலைகளில் மக்காச்சோள மாவு கலப்பதை தடுக்கவும், ஜவ்வரிசி உற்பத்தியாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பான கண்காணிப்புக் குழு கூட்டம் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்துக்கு, சேலம் சேகோ சர்வ் மேலாண்மை இயக்குநர் பத்மஜா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சேலம் ஆட்சியர் கார்மேகம் தலைமை வகித்து பேசியதாவது:

உணவுப் பாதுகாப்பு தரச்சட்ட விதிகளின்படி ஜவ்வரிசி ஆலைகளில் கலப்படமின்றி ஜவ்வரிசி உற்பத்தி செய்வதையும், ரசாயன கலப்படங்கள் ஏதுமின்றி ஜவ்வரிசி உற்பத்தி செய்யப்படுகின்றதா என்பதை கண்காணிக்க வேண்டும்.

ஜவ்வரிசி ஆலைகளில் இருந்து ரசாயனக் கழிவுகள் மற்றும் வாயுக்கள் வெளியேற்றி அருகாமையில் உள்ள விவசாய நிலங்களை பாதிப்படைய செய்யாமல் தடுக்க முறையான கண்காணிப்பை ஏற்படுத்த வேண்டும்.

உற்பத்தியாளர்களில் சிலர் ஜவ்வரிசி மற்றும் மாவுப் பொருட்களை வெளி சந்தையில் விற்பனை செய்து சரக்கு மற்றும் சேவை வரி வருமானத்தை தடுத்து அரசுக்கு நஷ்டம் ஏற்படுவதை தடுக்க வேண்டும்.

மக்காச்சோளம் மாவை மரவள்ளி கிழங்கு மாவுடன் சேர்த்து, ஜவ்வரிசி உற்பத்தி செய்து, மிகக் குறைவான விலையில் சில உற்பத்தியாளர்கள்விற்பனை செய்து வருகின்றனர். இதனால், தரமான உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை கிடைப்பதில்லை. மேலும், சந்தையில் ஜவ்வரிசி விலை குறைந்து மரவள்ளிக் கிழங்கின் கொள்முதல் விலையும் குறைந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

எனவே, கண்காணிப்புக் குழு கலப்பட ஜவ்வரிசி உற்பத்தி மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான புகார்களை கண்காணித்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இவ்வாறு ஆட்சியர் பேசினார்.

கூட்டத்தில், சேலம் மாநகர காவல் துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) மோகன்ராஜ், கோட்டாட்சியர்கள் விஷ்ணுவர்த்தினி (சேலம்), சரண்யா (ஆத்தூர்), வேடியப்பன் (சங்ககிரி), மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் கதிரவன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தமிழரசன், சேலம் சேகோ சர்வ் பொது மேலாளர் ஆறுமுகம், மேலாளர் (நிர்வாகம்) சஞ்சய் மஞ்ஜேகர் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள், தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT