Regional01

சேலம் அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்காக - ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 134 படுக்கை வசதி : மருத்துவர்கள், செவிலியர்களுக்கு சிறப்பு பயிற்சி

செய்திப்பிரிவு

கரோனா 3-வது அலையை எதிர்கொள்ள சேலம் அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 134 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், மருத்துவர்கள், செவிலியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

கரோனா தொற்றின் 3-வது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கலாம் என சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, சுகாதாரத் துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், குழந்தைகளுக்கு கரோனா தொற்றுக்கான சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக மருத்துவமனை டீன் வள்ளி சத்யமூர்த்தி கூறியதாவது:

சேலம் அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான தனி வார்டில் 134 படுக்கைகள் உள்ளன. அவற்றில் 50 படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதி கொண்டவை. மீதமுள்ள அனைத்து படுக்கைகளையும் ஆக்ஸிஜன் வசதி கொண்டதாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி 15 நாட்களில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்க, ஏற்கெனவே 25 வெண்டிலேட்டர்கள் உள்ள நிலையில், கூடுதலாக 20 வெண்டிலேட்டர்கள் நிறுவப்பட உள்ளது.

குழந்தைகளுக்கு கரோனா சிகிச்சை அளிக்க தேவையான பிரத்யேக மருந்துகள், மாத்திரைகள் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் 450-க்கும் மேற்பட்ட ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் இருப்பது போதுமானது.

சேலம் இஎஸ்ஐ மருத்துவமனையில் உள்ள 50 படுக்கைகளும் குழந்தைகளுக்கென ஒதுக்கப்பட்டு, ஆக்ஸிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டு குழந்தைகளுக்கான சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.

அங்குள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு குழந்தைகளுக்கு சுவாசிப்பதில் சிக்கல் ஏற்படும்போது, மாரடைப்பு ஏற்படும்போது எவ்வாறு அவசர கால சிகிச்சை அளிப்பது என்பது குறித்து குழந்தை பொம்மையைக் கொண்டு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மேலும், சேலம் அரசு மருத்துவமனையிலும் மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு இப்பயிற்சி வழங்கப்பட உள்ளது.

கரோனா 3-வது அலையை எதிர்கொள்வதற்கு அனைத்து சிகிச்சை வசதிகளும் தயார்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT