Regional03

ஈரோடு மாவட்டத்தில் - கோவேக்சின் 2-ம் தவணைக்காக 21 ஆயிரம் பேர் காத்திருப்பு : இன்று 182 மையங்களில் 17 ஆயிரம் பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி

செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டத்தில் இரண்டாவது தவணை கோவேக் சின் தடுப்பூசி போடுவதற்காக 21 ஆயிரம் பேர் காத்திருக்கும் நிலையில், இன்று மாவட்டம் முழுவதும் 17 ஆயிரம் பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படவுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 5.30 லட்சம் பேர் கரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். கடந்த 24-ம் தேதி முதல் ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல்படி வீடுகளுக்கு சென்று டோக்கன் வழங்கப்பட்டு, தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இம்முறையில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ள நிலையில், நேற்று தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், ஈரோடு, பவானி, கோபி, பெருந்துறை, நம்பியூர், சத்தியமங்கலம், தாளவாடி, மொடக்குறிச்சி உள்பட மாவட்டம் முழுவதும் 182 இடங்களில் இன்று (29-ம் தேதி) 17 ஆயிரம் பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படவுள்ளது.

இதற்காக, டோக்கன் நேற்று வழங்கப்படுவதாக அறிவிக்கப் பட்ட நிலையில், பலருக்கும் அது சென்று சேராத நிலை ஏற்பட்டது. குறிப்பிட்ட தனி நபர்களின் கையில் மொத்தமாக டோக்கன்கள் இருந்த நிலையில், அவர்களைத் தேடிச் சென்று டோக்கனை வாங்கும் நிலை ஏற்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

21 ஆயிரம் பேர் காத்திருப்பு

கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி போட்டவர்கள், மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு இரண்டாவது தவணை தடுப்பூசி போடலாம் என வரையறுக்கப் பட்டுள்ளது. ஆனால், கோவேக்சின் தடுப்பூசி முதல் தவணை செலுத்தியவர்கள் 4 முதல் 6 வாரத்திற்கு பின் இரண்டாவது தடுப்பூசியை போட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் முதல் தவணை கோவேக்சின் தடுப்பூசி போட்டவர் கள், இரண்டாம் தவணைக்குரிய நாள் நெருங்கியும், தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் 21 ஆயிரம் பேர் இரண்டாவது தவணை கோவேக்சின் தடுப்பூசி போட காத்திருக்கின்றனர். அரசிடம் இருந்து கோவேக்சின் ஒதுக்கீடு செய்யப்படும் பட்சத்தில், இரண்டாம் தவணைக்காக காத்திருப்போருக்கு முன்னுரிமை வழங்கி, அவர்களுக்கே தடுப்பூசி போடப்படும்.

இந்நிலையில் முதல்முறையாக தடுப்பூசி போடுபவர்களில் சிலர் தங்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி மட்டுமே வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.

தற்போது அரசின் இலவச தடுப்பூசி முகாம்களில் கோவிஷீல்டு மட்டும் போடப்படுகிறது. எனவே, கோவேக்சின் ஒதுக்கீடு வந்தாலும், இரண்டாம் தவணை தடுப்பூசி போடுபவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்பதால், அவர்கள் தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று கோவேக்சின் போட்டுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றனர்.

SCROLL FOR NEXT