சேலம் தாதகாப்பட்டி சண்முகா நகர் சாமுண்டி தெருவில் பாலகார்த்திகேயன் என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அலங்கார வாசனை புகையிலை என்ற பெயரில் சிறிய பாக்கெட்டுகளில் புகையிலை தயாரித்து கடைகளுக்கு விநியோகம் செய்து வருகிறார். மேலும், இவர் வேறுசில புகையிலைப் பொருட்கள் தயாரிப்பதாக மாவட்ட உணவுபாதுகாப்புதுறை அதிகாரி கதிரவனுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, கதிரவன் தலைமையிலான குழுவினர் பாலகார்த்திகேயனின் குடோனை ஆய்வு செய்தனர். கடந்த 10 நாட்களாக அங்கு எந்த பணியும் நடக்கவில்லை.
இதனால், அங்கு என்ன பொருட்கள் தயாரிக்கப்படுகிறது என்பது குறித்து முழுமையாக அறிய முடியவில்லை.
அதேநேரத்தில் புகையிலைப் பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் அரைத்த புகையிலை, பச்சைக் கற்பூரம், மென்தால், ஏலக்காய், பாக்கு தூள், சீவல், வாசனை வேதிப்பொருட்கள் உள்ளிட்டவை சுமார் 200 கிலோ மூலப்பொருட்களை குழுவினர் பறிமுதல் செய்தனர். இப்பொருட்களை ஆய்வு செய்த பின்னர் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என குழுவினர் தெரிவித்தனர்.