குறைந்த வாடகையில் வழங்கப்படும் வேளாண் இயந்திரங்களை பயன் படுத்தி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா வேண்டு கோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ‘‘தமிழக அரசு விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற் போதுள்ள சூழ்நிலையில் வேலை யாட்கள் பற்றாக்குறையை சமாளிக்க வும், விவசாயப் பணிகள் தடையின்றி குறித்த காலத்தில் செய்து முடிக்க வேளாண் பொறியியல் துறை சார்பில் புதிய மற்றும் நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் குறைந்த வாடகையில் விவசாயி களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் நவீன வேளாண் இயந்திரங்களான டிராக்டர்கள், டயர் வகை மண் அள்ளும் இயந்திரம், கரும்பு நடவு இயந்திரம் ஆகியவை இருப்பில் உள்ளன.
விவசாயப்பணி தேவைக்கு வேளாண் கருவிகள் கரும்பு நடவு செய்தல், சோள தட்டு அறுவை, பல்வகை பயிர்கள் கதிரடித்தல் உள்ளிட்ட வேளாண் பணிகளை மேற்கொள்ள டிராக்டருக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.340 என்ற குறைந்த அளவிலான வாடகைக்கு விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, டயர் வகை மண் அள்ளும் இயந்திரம் ஒரு மணி நேரத்துக்கு ரூ.660 என்ற குறைந்த வாடகைக்கு வழங்கப்படும். இத்தகைய வேளாண் நவீன இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தேவைப்படும் விவசாயிகள் ‘உதவி செயற்பொறியாளர் வேளாண் பொறி யியல் அலுவலகம், புதுப்பேட்டை ரோடு, சிவசக்திநகர், திருப்பத்தூர்-635-601 என்ற முகவரியில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
அதேபோல, விவசாயிகள் வசதிக் காக வேளாண்மை பொறியியல் உதவி செயற்பொறியாளர்கள் திருப் பத்தூர் 82706-25964, 94868-79217, நாட்றாம்பள்ளி 96291-26512, கந்திலி 98420-68597, ஆலங்காயம் 76391-39188, மாதனூர் 86677-05094, வேலூர் 0416-2266603 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்’’ என தெரிவித்துள்ளார்.