பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியிலிருந்து வரும் மோயாறும் நீர்வரத்து ஆதாரங்களாக உள்ளன. மேலும், கோவை மாவட்டம் பில்லூர் அணையிலிருந்து நீர் மின் உற்பத்திக்காக திறக்கப்படும் தண்ணீரும் பவானி சாகர் அணைக்கு வருகிறது.
இருதினங்களுக்கு முன்னர் பவானிசாகர் அணை 100 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் முழுவதும் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.
நேற்று காலை அணைக்கு விநாடிக்கு 5, 234 கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலையில் சரிந்தது.
மாலை 7 மணி நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 1871 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்துக்கு 800 கனஅடியும், பவானி ஆற்றில் 950 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர் மட்டம் 100 அடியாக இருந்தது.. அணையில் 28.72 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.
ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போலீஸார், வருவாய்த்துறை உள்ளிட்ட அரசுத் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.