சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. அதிகபட்சமாக ஆத்தூரில் 49.6 மிமீ.மழை பதிவானது.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. நேற்று முன்தினம் மாலை சேலம் மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
மழையால், சேலத்தின் பல இடங்களில் சாக்கடை கால்வாய்கள் நிரம்பி, தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், பொதுமக்கள் வீடுகளில் புகுந்த தண்ணீரை வெளியேற்ற சிரமப்பட்டனர். நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு பெய்த மழை இரவு 7 மணி வரைநீடித்தது.
சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம்: சேலம் 18, ஆத்தூர் 49.6, கெங்கவல்லி 30, வீரகனூர் 30, தம்மம்பட்டி 15, பெத்தநாயக்கன்பாளையம் 6.2, ஓமலூர் 5, வாழப்பாடி 4 மிமீ மழை பதிவானது.