Regional02

மதுப்பழக்கத்தை கைவிட பூஜை செய்த கயிறை கையில் கட்டிய நிலையில் - போதையில் அதிவேகமாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 4 பேர் கைது : விபத்து காட்சிப் பதிவை வழங்கியருக்கு சேலம் எஸ்பி பாராட்டு

செய்திப்பிரிவு

சேலம் அருகே மதுப் பழக்கத்தை கைவிட வழிபாடு செய்து பூஜை செய்த கயிறை கையில் கட்டிய நிலையில், மது போதையில் காரை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்திய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். விபத்து காட்சிப் பதிவை வழங்கியவருக்கு சேலம் எஸ்பி பாராட்டு தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் அக்கரையாம்பாளையத்தைச் சேர்ந்தவர் அருண் (22), இவரது நண்பர் சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த சிங்கிபுரத்தைச் சேர்ந்த அஜித்குமார் (24). இவர்கள் இருவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் பழநி கோயிலுக்கு சென்றுவிட்டு, கடந்த 25-ம் தேதி ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

சேலம் அடுத்த மகுடஞ்சாவடி வழியாக சேலம் வந்து கொண்டிருந்தனர். காளிகவுண்டம்பாளையம் அருகே வந்தபோது, அதிவேகமாக வந்த கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற அருண் மற்றும் அஜித்குமார் தூக்கி வீசப்பட்டு அதிர்ஷ்டவசமாக சாலையோரம் விழுந்தனர். காயமடைந்த இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

இதனிடையே, விபத்தை ஏற்படுத்திய கார் அதிவேகத்தில் அடுத்தடுத்த வாகனங்களை முந்திக்கொண்டு சென்று இருசக்கர வாகனத்தின் மீது மோதிய காட்சியை அந்த காரின் பின்னால் வந்த மற்றொரு காரில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவானது. மேலும், இக்காட்சிப் பதிவை காரின் உரிமையாளர் போலீஸாரிடம் அளித்தார். இதையடுத்து, சேலம் எஸ்பி  அபிநவ் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து வாகனப் பதிவெண் மூலம் விபத்து ஏற்படுத்திய காரில் வந்தவர்களை தேடி வந்தனர்.

விசாரணையில், பெரம்பலூர் மாவட்டம் எலம்பலூர் ராஜிவ்காந்தி நகரைச் சேர்ந்த சதீஷ்குமார் (35), அவரது நண்பர்கள் வினோத் (32), கவுதம்ராஜ் (31), அருண்குமார் (28) ஆகியோர் காரில் வந்தது தெரிந்து, தனிப் படை போலீஸார் 4 பேரையும் கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், விபத்து ஏற்படுத்திய சதீஷ்குமார் அவரது நண்பர்கள் 3 பேரும், மது பழக்கத்தில் இருந்து விடுபட சங்ககிரி அருகேயுள்ள ஒரு கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்திவிட்டு, அங்குள்ள பூசாரியிடமிருந்து பூஜை செய்யப்பட்ட கயிறை கட்டிக் கொண்டு, பின்னர் சொந்த ஊர் புறப்பட்டனர். மேலும், அவர்கள் மது போதையில் இருக்கும்போது கயிறை கையில் கட்டியுள்ளனர். பின்னர் காரில் வந்தபோது விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.

இதுதொடர்பாக சேலம் எஸ்பி  அபிநவ் கூறியதாவது:

இருசக்கர வாகனத்தின் மீது விபத்து ஏற்படுத்திய கார் சென்றதை அவ்வழியாக சென்ற மற்றொரு காரில் சென்றவர் கவனித்து அதன் வீடியோ பதிவை கொடுத்து, வழக்கில் குற்றவாளிகள் கைது செய்ய உதவியிருக்கிறார். அவர் தனது அவசர வேலைக்கு இடையில் மனிதாபிமானத்தோடு செயல்பட்டிருக்கிறார். இதுபோன்ற நிகழ்வுகளின் போது, பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுக்க வேண்டும். இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் ஹெல்மெட் அணிந்திருந்ததால் உயிர் தப்பினர். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் விபத்து காட்சிப் பதிவை வழங்கிய கார் உரிமையாளரை எஸ்பி பாராட்டினார்.

SCROLL FOR NEXT