Regional02

சேலம் மாவட்டத்தில் 11 மையங்களில் 31-ம் தேதி - நீதித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு :

செய்திப்பிரிவு

நீதித்துறையில் உள்ள பல்வேறு காலி பணியிடங்களுக்கு வரும் 31-ம் தேதி மற்றும் ஆகஸ்ட் 1-ம் தேதிகளில் எழுத்துத் தேர்வு நடக்கிறது. சேலம் மாவட்டத்தில் 11 மையங்களில் தேர்வு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் ஜுடிசியல் ரெக்ருட்மென்ட் செல் நடத்தும் பல்வேறு காலி பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, சேலம் மாவட்டத்தில் மொத்தம் 11 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இத்தேர்வின் முதல் நாளான வரும் 31-ம் தேதி

13,600 பேரும் ஆகஸ்ட் 1-ம் தேதி நடக்கவுள்ள இரண்டாம் நாள் தேர்வில் 6,000 பேரும் பங்கேற்கவுள்ளனர்.

இத்தேர்வு முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு சேலம் ஆட்சியர் கார்மேகம், முதன்மை மாவட்ட நீதிபதி எஸ்.குமரகுரு மற்றும் குடும்ப நல நீதிபதி பத்மா ஆகியோர் தலைமை வகித்தனர்.

கூட்டத்தில், தேர்வு மையங்களில் தேவையான குடிநீர், கழிப்பிடம், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முழுமையாக ஏற்படுத்தவும், தேர்வு மையங்களுக்கு செல்ல வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கவும், தேர்வு மையங்களில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக கடைப்பிடித்து தேர்வை நடத்தவும்’ அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில், சேலம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ், சேலம் மாநகர காவல் துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) மோகன்ராஜ், கோட்டாட்சியர் விஷ்ணுவர்த்தினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT