Regional02

நிலமோசடி வழக்கில் பெண் கைது :

செய்திப்பிரிவு

நிலமோசடி வழக்கில் 3 ஆண்டுகளாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த பெண் கைது செய்யப்பட்டார்.

சென்னை சாய் நகரைச் சேர்ந்த ரெங்கசாமி மனைவி ஜெயப்பிரதா (42). இவருக்கு 3-ல் ஒரு பங்கு பாத்தியப்பட்ட சொத்து தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூரில் உள்ளது. இந்த சொத்தை, அவரது தாயார் ரங்கம்மாள் மோசடி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் கூட்டுச் சதி செய்து, மதுரை கோச்சடை பகுதியைச் சேர்ந்த சிவராஜா மனைவி லட்சுமி பிரியா (32) என்பவரை வைத்து, தனது மகள் ஜெயப்பிரதா என ஆள் மாறாட்டம் செய்து கோவில்பட்டி இனாம் மணியாச்சியை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் மாரிமுத்து என்பவருக்கு 2010-ம் ஆண்டு போலியான பொது அதிகாரம் ஆவணம் பதிவு செய்துள்ளனர்.

இதில் லட்சுமி பிரியா ஆள்மாறாட்டம் செய்து ஜெயப்பிரதா என போலி கையொப்பமிட்டு குற்றம் புரிந்துள்ளார். இது குறித்து ஜெயப்பிரதா கடந்த 2012-ம்ஆண்டு அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி நிலஅபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளை கைது செய்து 22.12.2013 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணை நடைபெற்று வந்தது.

இவ்வழக்கின் குற்றவாளிகளான ரங்கம்மாள் மற்றும் தாமோதரன் ஆகியோருக்கு தூத்துக்குடி நில அபகரிப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு தலா 6 ஆண்டு சிறைத் தண்டனையும், மற்றொரு குற்றவாளியான மாரி முத்துவுக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்துள்ளது.

இவ்வழக்கின் மற்றொரு குற்றவாளியான லட்சுமி பிரியா என்பவர் பல ஆண்டுகளாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்துள்ளதால் நீதிமன்றம் கடந்த 2018-ம்ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக அவரை அறிவித்து, பிடியாணையும் பிறப்பித்தது. இந்நிலையில், 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த லட்சுமி பிரியாவை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர்.

SCROLL FOR NEXT