குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை 100 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நாசரேத் உடையார்குளத்தைச் சேரந்தவர் முத்து மகன் பலவேசம் (43). வலைதள குற்றத்தின்கீழ் சைபர் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து பலவேசத்தை கைது செய்தனர். எஸ்பி ஜெயக்குமார் பரிந்துரைப்படி, பலவேசத்தை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் நேற்று உத்தரவிட்டார். நடப்பாண்டில் இதுவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.
எஸ்பி ஜெயக்குமார் கூறும்போது, ``கொலை, கொலை முயற்சி என பல்வேறு வழக்குளில் ஈடுபட்ட பிரபல ரவுடிகள் 74 பேர், போக்சோ வழக்குகளில் 13 பேர், கஞ்சா மற்றும் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 8 பேர், மணல் திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட 3 பேர், விபச்சார வழக்கில் ஈடுபட்ட ஒருவர் மற்றும் சைபர் கிரைம் குற்றவாளி ஒருவர் என மொத்தம் 100 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள்” என்றார் அவர்.