திருப்பூர் மாவட்ட கைத்தறி நெசவாளர் சங்கத் தலைவர் என்.கோபால், செயலாளர் என்.கனகராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், "திருப்பூர் மாவட்டத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் குடும்பத்தினர் வாழ்கின்றனர். கரோனா தொற்று காரணமாக நெசவாளர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். தமிழகத்தில் நெசவாளர் கூட்டுறவு சொசைட்டிகள், செயல்படாத நிலையில் உள்ளன. ஏற்கெனவே நெய்து கொடுத்த சேலைகளுக்கு கூலியை உடனடியாக வழங்க வேண்டும்.
சொசைட்டியில் உள்ள சேலைகளை கோ-ஆப்டெக்ஸ் மூலமாக உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். நெய்வதற்கு உடனடியாக பாவு வழங்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கூலி வழங்க வேண்டும். கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறும் வகையில், நெசவாளர் கூட்டுறவு வங்கி ஏற்படுத்த வேண்டும். தனியார் கைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் ஏற்கெனவே வழங்கி வந்த கூலியை, சேலை ஒன்றுக்கு ரூ.300 வரை கரோனா தொற்றுக்கு பின் குறைத்து வழங்குகிறார்கள். இது சட்டத்துக்கும், இயற்கை நீதிக்கும் எதிரானது. விலைவாசி உயர்வை ஈடுகட்ட கூலியை உயர்த்தி வழங்க வேண்டும்.
நெசவாளர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும். நெசவாளர்களுக்கு தறி கூடத்துடன் கூடிய பசுமை வீடு கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் என்பதை 500 யூனிட்டாக உயர்த்தி வழங்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.