மின்துறை தனியார்மயம் தொடர்பாக மாநில வளர்ச்சி, ஊழியர் நலனை அடிப்படையாக கொண்டு மத்திய அரசை அணுகி கோரிக்கை வைக்க உள்ளோம். அக்கோரிக்கை புதுச்சேரி மக்களும், ஊழியர்களும் நினைப்பது போல் இருக்கும் என்று மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
புதுச்சேரி சோனாம் பாளையத்தில் உள்ள மின்துறை தலைமை அலுவலகத்தில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் துறைச் செயலர் தேவேஷ் சிங், கண்காணிப்புப் பொறியாளர் சண்முகம் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆய்வு கூட்டத்துக்குப் பின்பு மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறும்போது, "நகரப் பகுதி முழுவதும் உள்ள தெரு விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்ற உள்ளோம். நகரப் பகுதியில் இரவில் ஆய்வு செய்து, எரியாத தெரு விளக்குகள் அனைத்தையும் எரிய வைப்போம்.
கட்டண உயர்வு அரசின் கொள்கை முடிவு. அதை முதல்வரிடம் கலந்து பேசி முடிவு எடுப்போம்.
மின்கட்டண குளறுபடியை சரிசெய்ய மின்துறையை நவீனமயமாக்கும் முயற்சியை மத்திய அரசு எடுத்துள்ளது. அதில் பல கட்டமைப்பு உருவாக்குவதன் மூலம் இக்குளறுபடி சரியாகும்.
மின்துறையை தனியார் மயமாக்கும் விஷயத்தில், மத்தியஅரசு சில முடிவு எடுத்து அமல்படுத்துகிறார்கள். இந்த விஷயத்தில் மத்திய அமைச்சரை சந்தித்து பல கோரிக்கைகளை அரசு சார்பில் வைக்க உள்ளோம். மாநில வளர்ச்சி, ஊழியர் நலன் கருதி மத்திய அரசை அணுகி எங்கள் கோரிக்கையை வைப்போம்.அக்கோரிக்கையானது புதுவை மக்களும், ஊழியர்கள் நினைப்பதற்கு ஏற்றவாறு இருக்கும். புதுச்சேரியில் மின் திருட்டு இல்லை. வணிக நிறுவனங்களில் சிலரிடம் மின் கட்டண நிலுவை அதிகளவில் உள்ளது. அதை வசூல் செய்வோம். கரோனாவால் கெடுபிடி உருவாக்கக் கூடாது என்பது எங்கள் எண்ணம். நிலுவைத் தொகையை சிறுக சிறுக வசூலிப்போம். சிலர் நீதிமன்றம் சென்றுள்ளனர். வழக்குகளை விரைந்து முடித்து உடன் வசூலிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.மின் பற்றாக்குறை புதுச்சேரியில் இல்லை. போதிய அளவு வாங்கி விநியோகிக்கிறோம். பதவி உயர்வு தொடர்பான கோப்புகள் ஏதும் நிலுவையில் இல்லை. காலி பணியிடங்கள் நிரப்பவும் நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்தார்.