கார்கில் வெற்றி தின விழாவையொட்டி புதுச்சேரியில் ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோர் நினைவுத் தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
கடந்த 1999-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடைபெற்ற கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது.
போரில் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களை போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதியன்று கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
புதுவை அரசு சார்பில் கடற்கரை சாலையில் நடைபெற்ற கார்கில் வெற்றி தின விழாவில், ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கார்கில் நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
அவர்களை தொடர்ந்து சட்டப் பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், சாய் ஜெ சரவணக்குமார், எம்எல்ஏக்கள், தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு கார்கில் நினைவுத் தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.