தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பங்கேற்பின்றி கொடியேற்றம் நடைபெற்றது. (அடுத்த படம்) பேராலயத்தில் வீற்றிருக்கும் தூய பனிமய அன்னை. படங்கள்: என்.ராஜேஷ் 
Regional02

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் 2-வது ஆண்டாக - பக்தர்கள் பங்கேற்பின்றி பெருவிழா கொடியேற்றம் :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய 439-வது ஆண்டு பெருவிழா கொடியேற்றம் பக்தர்கள் பங்கேற்பின்றி நேற்று நடைபெற்றது.

தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமையில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு பேராலயத்தில் சிறப்புதிருப்பலி நடைபெற்றது.

காலை 7 மணிக்கு பேராலயம் முன்புள்ள கொடிமரத்தில் அன்னையின் திருக்கொடியை ஆயர் ஸ்டீபன் ஆண்டகை ஏற்றிவைத்தார். பேராலய பங்குத்தந்தை குமார் ராஜா மற்றும்அருட்தந்தையர்கள், பேராலய நிர்வாகிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

பொதுமக்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்படவில்லை. பக்தர்கள் கூடுவதை தவிர்ப் பதற்காக ஆலயத்துக்கு செல்லும்அனைத்து சாலைகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, மாவட்ட எஸ்பி எஸ்.ஜெயக்குமார் தலைமையில் சுமார் 400 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, பகல் 12 மணிக்கு தூய பனிமய அன்னைக்கு பொன் மகுடம் சூட்டப்பட்டது.

நற்கருணை பவனி, சப்பர பவனி ஆகிய முக்கிய நிகழ்வுகள் நடைபெறாது. ஆலயத்துக்குள் நடைபெறும் ஜெபமாலை, திருப்பலி, நற்கருணை ஆசீர் போன்றவழிபாடுகள் பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெறும். ஆகஸ்ட் 4-ம் தேதி இரவு 7 மணியளவில் திருவிழா சிறப்பு மாலை ஆராதனை, ஆகஸ்ட் 5-ம் தேதி காலை 7.30 மணிக்கு பெருவிழா சிறப்பு கூட்டுத் திருப்பலி ஆகியவை ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமையில் நடைபெறும். ஆனால், பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை. இந்தநிகழ்வுகள் உள்ளூர் தொலைக்காட்சி, யூடியூப் சேனல் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

SCROLL FOR NEXT