தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மாவட்டச் செயலாளர் எஸ்.நல்லையா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். முன்னாள் எம்எல்ஏ எஸ்.ராஜேந்திரன், மாவட்டத் தலைவர் எஸ்.எம்.ராமையா, துணைச் செயலாளர் வி.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர், அவர்கள் அளித்த மனு விவரம்:
விவசாயிகளுக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட வெள்ள நிவாரணத் தொகைபலருக்கு விடுபட்டுள்ளது. விடுபட்ட விவசாயிகள் அனைவருக்கும் உடனடியாக வெள்ள நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.
2020- 2021-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு திட்ட இழப்பு தொகையை உடனே வழங்க வேண்டும். மாவட்டத்தில் ஏரி, குளம், கால்வாய், ஓடை உள்ளிட்ட நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்பாக குழு அமைத்து ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகரெட்டிபட்டி ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், `வர்த்தகரெட்டிபட்டி ஊராட்சியில் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்கவும், தெருவிளக்குகள் பராமரிப்பு பணிகள் செய்து, 100 சதவீதம் விளக்குகள் எரியவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை அடையாள அட்டை பெறாதவர்களுக்கு உரிய அட்டை வழங்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி 30-வது வார்டு அமமுக வட்டச் செயலாளர் காசிலிங்கம் அளித்த மனுவில், `டூவிபுரம், மணிநகர் பகுதியில் உள்ள பல திருமண மண்டபங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு வாகன நிறுத்தும் வசதி இல்லை. இதனால், வாகனங்களை சாலையில் நிறுத்த வேண்டிய நிலை உள்ளது. போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே, வாகன நிறுத்தும் வசதி இல்லாத திருமண மண்டபங்கள், வணிக வளாகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி
போல்டன்புரத்தை சேர்ந்தவர் நாகராஜன் (43). மாற்றுத்திறனாளியான இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சிவஞானபுரம் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணி நியமனம் செய்யப்பட்டார். கடந்த ஓராண்டாக அவரை பணியில் சேர விடாமல் சிலர் தடுக்கின்றனராம்.
`டாஸ்மாக் கடையில் தன்னை பணியாற்ற அனுமதிக்க வேண்டும், அனுமதி மறுப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தி, ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். வெளியே வந்ததும் திடீரென தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீஸார் விரைந்து வந்து தடுத்து நிறுத்தினர். பின்னர், சிப்காட் போலீஸ் நிலையத்துக்கு அவரை அழைத்துச் சென்ற போலீஸார், அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.