ஏற்காட்டில் பகலில் குளிர்ந்த காற்றும், சாரல் மழையும் பெய்து வரும் நிலையில், வார விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது.
கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டிருந்த முழு ஊரடங்கில் ஏராளமான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இ-பாஸ் ரத்து, பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி, சுற்றுலா தளங்கள் திறப்பு உள்ளிட்ட பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வீடுகளிலேயே முடங்கி இருந்த மக்கள் தற்போது, சுற்றுலா செல்ல அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. தற்போது, இங்கு பகல் நேரத்தில் குளிர் மற்றும் சாரல் மழையும் பெய்கிறது. இதனால், பயணிகள் ஆர்வமுடன் இங்கு வந்து செல்கின்றனர். வாரவிடுமுறை நாளான நேற்று, வழக்கத்தை விட அதிக பயணிகள் வந்திருந்தனர். குறிப்பாக, சேலம் மற்றும் அண்டை மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பயணிகள் அதிக அளவில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்திருந்தனர்.
ஏராளமான வாகனங்கள் வருகையால் ஏற்காடு சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டதோடு, கோடை காலத்தைப்போல பயணிகள் கூட்டமும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக பயணிகள் சிலர் கூறியதாவது:
முழு ஊரடங்கு தளர்வு காரணமாக, சுற்றுலா செல்ல திட்டமிட்டோம். ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களில் தற்போது, மழை அதிகளவில் பெய்வதால், அங்கு செல்ல முடியவில்லை. எனவே, ஏற்காட்டை தேர்வு செய்து வந்தோம்.
இங்கு அண்ணா பூங்கா, ரோஜாத் தோட்டம், ஏற்காடு படகு குழாம் ஆகியவை மூடப்பட்டிருப்பது ஏமாற்றம் அளித்தது. எனினும், இங்குள்ள இயற்கை சூழல், காட்சி முனைகள் ஆகியவற்றை பார்த்து மகிழ்ந்தோம்” என்றனர்.
களைகட்டிய மேட்டூர்
இந்நிலையில், நேற்று பூங்கா திறக்கப்பட்டதால், அணை பூங்காவுக்கு மேட்டூர் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பலர் குழந்தைகளுடன் கூட்டம் கூட்டமாக வந்திருந்தனர்.