கரோனா தடுப்பூசி போடுவதற்கான டோக்கன், வாக்காளர் பட்டியல் அடிப்படையில் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் என ஈரோடு ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி தெரிவித்துள்ளார்.
தமிழக அளவில் கரோனா பாதிப்பில் ஈரோடு மாவட்டம் தொடர்ந்து இரண்டாவது இடத்தைப் பிடித்து வந்த நிலையில், தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. அதேநேரத்தில் கரோனா தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தடுப்பூசி முகாம்களில் முதல் நாள் இரவிலிருந்தே காத்திருந்து, தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் நாளை (27-ம் தேதி) முதல், வாக்காளர் பட்டியல் அடிப்படையில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி டோக்கன் வழங்கப்படும் என ஈரோடு ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பொதுமக்கள் தங்கள் வாக்களிக்கும் வாக்குச்சாவடி அமைவிடத்திலேயே டோக்கனுடன் வந்து குறிப்பிட்ட தேதியில்கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். கரோனா தடுப்பூசிக்கான டோக்கன்களில், தடுப்பூசிக்கான தவணைமுறை மற்றும் தேதி குறிப்பிடப்பட்டிருக்கும். ஏற்கெனவே தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட மாட்டாது.
பொதுமக்களுக்கான தடுப்பூசி டோக்கன்கள், வாக்காளர் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள வரிசை எண்களின் அடிப்படையில், கரோனா தடுப்பூசியின் கையிருப்பினை பொறுத்து வழங்கப்படும். இப்பணிகள் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக, பத்து கட்டங்களாக நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், மருந்து கையிருப்பு இல்லாததால், கடந்த இரு நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போடப்படவில்லை.