Regional02

பக்ரீத் விருந்துக்கு உறவினர் வீட்டுக்கு வந்த : சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

கேரள மாநிலம் பாலக்காடுமாவட்டம் மன்னார்க்காடுபகுதியை சேர்ந்தவர் ஷாகின் (எ) ஷாஜகான். வெளிநாட்டில் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மும்தாஸ். தம்பதிக்கு இரண்டு மகள், மகன் உள்ளனர்.

இந்நிலையில், 4 மாதங்களுக்கு முன்பு ஷாகின் கேரளாவுக்கு திரும்பியுள்ளார். இவரது தங்கைமுபீனா, திருப்பூரில் வசித்து வந்துள்ளார். பக்ரீத்பண்டிகைக்காக கேரளாவில் இருந்து திருப்பூரில் உள்ள தங்கை வீட்டுக்கு மகள்கள், மகன் அல்சாபித்தை அனுப்பி வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கோம்பைத்தோட்டம் சொர்ணபுரி லே-அவுட் 5-வது வீதியிலுள்ள முபீனா வீட்டின் மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, தாழ்வாகசென்ற மின் கம்பியை எதிர்பாராதவிதமாக அல்சாபித் (13) தொட்டுவிட, மின்சாரம் பாய்ந்து மயக்க நிலைக்கு சென்றார்.

உடன் விளையாடிய சகோதரிகள் வீட்டில் இருந்தவர்களுக்கு தகவல் அளித்தனர். உடனடியாக திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுவனை சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு பரிசோதிக்கப்பட்டபோது, சிறுவன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சிறுவனின் சடலத்தை தெற்கு காவல்துறையினர்மீட்டு, திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குஅனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக வழக்குபதிந்து விசாரிக்கின்றனர். கோம்பை தோட்டம் பகுதியில் மிக தாழ்வான நிலையில் மின்கம்பி செல்வதால், இரண்டு பேர் மீது மின்சாரம் பாய்ந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

தற்போது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயத்தில் திருப்பூர் மின்வாரியம் கவனம் செலுத்தி, தாழ்வாக செல்லும் மின் ஒயர்களை மாற்றி அமைக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT