பல்லடத்தை அடுத்த கரடிவாவி ஊராட்சியில் அமைந்துள்ள நந்தவனக்குட்டையில், தேங்கும் மழைநீர் விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது பராமரிப்பின்றி ஏராளமான கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. அப்பகுதியை சேர்ந்த கால்நடை விவசாயிகள் ஆடு, மாடுகளை மேய்த்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக குட்டைக்குள் 10-க்கும் மேற்பட்ட நரிகள் நடமாடுவதாக வும், தோட்டங்களில் புகுந்து கடித்துகுதறியதில், சில ஆடுகள் இறந்துள்ளதாகவும், ஆடுகள், கோழிகள் காணாமல் போனதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
திருப்பூர் கோட்ட வனச்சரகர் செந்தில்குமார் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, "பல்லடம் பகுதியில் நரிகளின் நடமாட்டத்துக்கு வாய்ப்புகள் குறைவு. இதுவரை யாரும் தகவல் அளிக்கவில்லை. நாய்களின் நடமாட்டமாககூட இருக்கலாம். இருப்பினும் அதுகுறித்து விசாரிக்கப்படும்" என்றார்.