Regional01

பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம் தயாரிக்க விவசாயிகளுக்கு பயிற்சி : வேளாண் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் தகவல்

செய்திப்பிரிவு

இயற்கை இடுபொருட்களான பஞ்சகவ்யம், தசகவ்யம், ஜீவாமிர்தம் தயாரிக்க விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று சேலம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில், ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இருந்து காணொலி வாயிலாக நடத்தப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ரவிக்குமார், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் கணேசன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் சத்யா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து விவசாயிகள் காணொலி மூலமாக கூட்டத்தில் பங்கேற்று, கோரிக்கைகளை தெரிவித்தனர்.

கூட்டத்தில் ஆட்சியர் கார்மேகம் பேசியதாவது:

வேளாண் பணிகளுக்குத் தேவையான உரம் மற்றும் விதை போன்ற இடுபொருட்கள் போதுமான அளவு இருப்பு உள்ளது. தோட்டக்கலைத் துறையின் மூலம் இயற்கை இடுபொருட்களான பஞ்சகவ்யம், தசகவ்யம், ஜீவாமிர்தம், திறனூட்டப்பட்ட நுண்ணுயிர் மற்றும் மண்புழு உர வடிகட்டி தயாரிக்கும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கும், விவசாய குழுக்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இது குறித்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்களை விவசாயிகள் அணுகி பயனடையலாம்.

சேலம் மாவட்டத்தில் பருவகாலத்தில் சராசரியாக 997.90 மிமீ., மழை பெய்யும். ஜூலை மாதம் முடிய வரை பெய்ய வேண்டிய இயல்பாக மழையளவு 348.30 மிமீ., ஆகும். கடந்த 20-ம் தேதி வரை மாவட்டத்தில் 412.40 மிமீ., மழை பெய்துள்ளது.

மாவட்டத்தில் ஜூன் மாதம் வரை 46,451.10 ஹெக்டர் பரப்பளவில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT