கிருஷ்ணகிரி மாவட்டம் தொகரப்பள்ளி அருகில் உள்ள மயிலாடும்பாறையில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் கடந்த மார்ச் மாதம் முதல் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பணிகளை நேற்று பர்கூர் எம்எல்ஏ மதியழகன் பார்வையிட்டார். அப்போது, அங்கு 300-க்கும் மேற்பட்ட பெருங்கற்கால ஈமச்சின்னங்களான கற்திட்டை களும், கற்பதுக்கைகள் இருந்தன.
இதில், தற்போது 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அகழாய்வு மேற்கொண்டதில் கிடைத்த 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்காலத்தைச் சேர்ந்த, 110 செமீ நீளமுள்ள வாள், பானைகள், குவளை, கல் கோடாரி, கத்தி, கற்பதுக்கையில் 3 கால்கள் உள்ள 5 குடுவைகள், 4 கத்திகள், ஒரு கிண்ணம் ஆகியவற்றை ஆய்வில் ஈடுபட்டுள்ளவர்கள் காட்சிப்படுத்தி இருந்தனர்.
இதை பார்வையிட்ட எம்எல்ஏ மதியழகன், மயிலாடும்பாறை அகழாய்வு இயக்குநர் சக்திவேல், கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், தொல்லியல் அகழாய்வு அலுவலர் பரந்தாமன் ஆகியோரிடம் விவரங்களை கேட்டறிந்தார்.அப்போது, அங்கிருந்த வரலாற்று ஆய்வுக்குழுவினர் இந்த அகழாய்வு அடுத்த மாதம் நிறைவடைய உள்ள நிலையில், 2-ம் கட்ட அகழாய்வு மேற்கொள்ள அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என எம்எல்ஏ-விடம் கோரிக்கை விடுத்தனர்.