Regional01

அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊரக வளர்ச்சி மையத்தில் - தலைமை பண்பை வளர்க்க ஊராட்சித் தலைவர்களுக்கு பயிற்சி :

செய்திப்பிரிவு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊரக வளர்ச்சி மையத்தில் மத்திய அரசின் ‘உன்னத் பாரத் அபியான்’ திட்டத்தின் கீழ் ஊராட்சி மன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலர் ஆகியோருக்கு தலைமைப் பண்பினை வளர்த்தல் மற்றும் ஓட்டுமொத்த ஊரக வளர்ச்சி பற்றி ஒருநாள் பயிற்சிக் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தில்லை விடங்கன், தாண்டவராயன் சோழகன் பேட்டை, பிச்சாவரம், வசப்பத்தூர் நக்கரவந்தன்குடி ஆகிய ஊராட்சிகளின் ஊராட்சி மன்றத் தலைவர்கள் ,துணைத் தலைவர்கள், செயலாளர்கள், வார்டு உறுப்பினர்கள் என 50 பேர்கலந்து கொண்டனர்.

நிகழ்வுக்கு ஊரக வளர்ச்சி மையத்தின் தலைவர் முனைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். ‘உன்னத் பாரத் அபியான்’ திட்ட அதிகாரி முனைவர் வேதாந்த தேசிகன் வரவேற்று பேசினார்.

கூடுதல் ஆட்சியர்( ஊரக வளர்ச்சி) பவன்குமார் ஜி. கிரியப்பனவர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி பயிற்சியை தொடங்கி வைத்து, கிராம வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதற்கு, திட்டமிடுதல் சுயவேலைவாய்ப்பை உருவாக்குதல் கரோனா மற்றும் தொற்று நோய் அபாயத்திலிருந்து மக்களை பாதுகாத்து கொள்வதற்கான வழிமுறைகள், தடுப்பசி முக்கியத்துவம் பற்றி விளக்கிப் பேசினார்.

பல்கலைக்கழக கடல்வாழ் உயிரியல் புல முதல்வர் மற்றும் ஆட்சி மன்ற குழு உறுப்பினர் பேராசிரியர் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். தமிழ்நாடு மாநில அளவிலான ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் தகவல் தொடர்பு மையத் தலைவர் தில்லை நாயகம் ஊராட்சி மன்றத் தலைவர்களின் முக்கிய பணிகள், உரிமைகள், பஞ்சாயத்தின் கடமைகள் பற்றிப் பேசினார்.

பொருளாதாரத் துறை பேராசிரியர் ரவி, ‘மனித வளம் மற்றும் இயற்கை வளம் மேலாண்மை என்பது ஒரு கலை’ என்ற தலைப்பில் பேசினார். ஊரக வளர்ச்சிப் பணி பயிற்றுநர் செந்தில் கிராம நிர்வாகம் மற்றும் திட்டப்பணிகள் மற்றும் திட்டமிடுதல் பற்றி விரிவாக பட விளக்கங்களுடன் எடுத்துரைத்தார். வேளாண் துறை புல முதல்வர் கணபதி வேளாண் சார் உப தொழில்கள் குறித்து உரையாற்றினார். ஒருங்கிணைப்பாளர் முனைவர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.

ஆராய்ச்சி மாணவர் கிருஷ்ண குமார், ஊரக வளர்ச்சி மைய விரிவாக்க அலுவலர் கமலநாதன், ராசா, பாலகுரு ஆகியோர் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT