வடகரை அருகே மலையடிவார பகுதியில் நடமாடும் யானைகள். 
Regional01

வயல்களில் புகுந்த யானைகள் : தென்னை, வாழைகள் சேதம்

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம், வடகரை அருகே நேற்று முன்தினம் 4 யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து சேதப்படுத்தின. வனப் பகுதிக்குள் யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல முறை வலியுறுத்தியும் உரிய நடவடி க்கை எடுக்கவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் மேலும் கூறும்போது, “வடகரை பகுதியில் கடந்த ஓராண்டுக்கு மேலாக யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மா, தென்னை, வாழை மரங்கள், தண்ணீர் குழாய்கள், வேலிகள் போன்றவற்றையும் சேதப்படுத்தி உள்ளன.

அடவிநயினார் அணைக்குச் செல்லும் வழியில் உள்ள ஒச்சாநடை பகுதியில் சுமார் 500 வாழை மரங்களை முறித்து சேதப்படுத்தி உள்ளன. வடகரை, ரகுமானியபுரம் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சாய்த்துவிட்டன. இப்பகுதியில் சுமார் 50 வீடுகள் உள்ளன. குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் யானைகள் வருவதால் மனித உயிருக்கு அபாயம் உள்ளது. உயிர்ச் சேதம் ஏற்படும் முன் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

SCROLL FOR NEXT