Regional02

திருச்செந்தூர் பேருந்து நிலையத்தை - பல்நோக்கு வசதிகளுடன் தரம் உயர்த்த திட்டம் :

செய்திப்பிரிவு

திருச்செந்தூர் பேருந்து நிலையம், பல்நோக்கு வசதிகளுடன் கூடிய பேருந்து மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடமாக அமைக்கப்பட்ட உள்ளது.

திருச்செந்தூர் பேருந்து நிலையம், தோப்பூரில் பாதாளச்சாக்கடைத் திட்ட சுத்திகரிப்பு நிலையம் மற்றும் ஆலந்தலையில் உள்ள குப்பைக்கிடங்கு ஆகியவற்றை, பேரூராட்சிகளின் ஆணையர் ரா.செல்வராஜ், குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் சி.விஜயராஜ்குமார், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

பேரூராட்சிகளின் ஆணையர் ரா.செல்வராஜ் கூறும்போது, ``திருச்செந்தூர் பேரூராட்சியில் தற்போது வரை 255 வீடுகளே பாதாளச்சாக்கடைத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள விடுதிகள், வணிகநிறுவனங்கள் ஆகியவற்றையும், அதன்பின்னர் குடியிருப்புகளையும் முழுமையாக இணைத்த பிறகே பாதாளச் சாக்கடைத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியும்.

திருச்செந்தூர் பேருந்து நிலையத்தை பல்நோக்கு வசதிகளுடன் கூடிய பேருந்து மற்றும் வாகன நிறுத்து மிடமாகவும், தங்கும் வசதியுடன் அமைப்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது” என்றார் அவர்.

திருச்செந்தூர் கோட்டாட்சியர் மு.கோகிலா, காவல் உதவி கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங், பேரூராட்சிகளின் இணை இயக்குநர் மலையமான் திருமுடிக்காரி, கண்காணிப்பு பொறியாளர் அன்பழகன், செயற்பொறியாளர் ஜெகதீஷ்வரி மற்றும் அதிகாரிகள் உடனி ருந்தனர்.

SCROLL FOR NEXT