தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் சுகாதாரத்துறை சார்பில் பச்சிளம் குழந்தைகளுக்கான நியூமோகோக்கல் கான்ஜூகேட் தடுப்பூசி (பிவிசி) முகாமை, ஈரோடு மாநகராட்சி நகர்நல மையத்தில் ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து ஆட்சியர் கூறியதாவது:
நியூமோகோக்கல் நிமோனியா மற்றும் மூளைக்காய்ச்சல் ஆகிய நோய்களிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்காக, நியூமோகோக்கல் கான்ஜூகேட் தடுப்பூசி (பிவிசி) வழங்குவதற்கான முகாம் தொடங்கியுள்ளது.
நியூமோகோக்கல் நிமோனியா என்பது கடுமையான சுவாச நோய்த்தொற்றின் ஒரு வகை ஆகும். இது நுரையீரலில் வீக்கம் மற்றும் நீர்த்தேக்கத்தை ஏற்படுத்தி, சுவாசத்தைக் கடினமாக்குகிறது. இதோடு, ஆக்சிஜன் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துகிறது. இருமல், மூச்சு விடுவதில் அடிக்கடி சிரமம் மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.
எனவே, குழந்தைகளுக்கு பிவிசி தடுப்பூசிப் போடுவதன் மூலம், நியுமோகோக்கல் நோய் காரணமாக ஏற்படும் பிற நோய்கள் மற்றும் இறப்புகளைத் தடுக்க முடியும். பிவிசி தடுப்பூசியானது பச்சிளம்குழந்தைகளுக்கு மூன்று தவணைகளாக போடப்படுகிறது. 6 வாரம், 14 வாரம் மற்றும் 9 மாதம் ஆகிய தவணைகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒவ்வொரு வாரமும் அரசு மருத்துவமனைகளில் புதன்கிழமையன்று குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. அதே நாளில் இந்த தடுப்பூசியை பச்சிளம் குழந்தைகளுக்கு மூன்று தவணைகளாகப் போட்டுக் கொள்ளலாம்.
முகாமில் ஈரோடு மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், சுகாதாரத்துறை துணை இயக்குநர் சவுண்டம்மாள், நகர்நல அலுவலர் முரளிசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.