Regional01

கொங்கணாபுரத்தில் சாலையை அகலப்படுத்த - விவசாய நிலத்தை கையகப்படுத்தும் பணியை கைவிடக்கோரி ஆட்சியரிடம் மனு :

செய்திப்பிரிவு

சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் சாலையை அகலப்படுத்தும் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் ஆயத்தப் பணிகளை கைவிட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் ஓமலூர் - பரமத்தி சாலை திட்டத்தில் ஏற்கெனவே ஒரு வழித்தடம் அமைக்கப்பட்டபோது எங்களது விளை நிலத்தின் ஒரு பகுதி கையகப்படுத்தப்பட்டுள்ளது. அத்திட்டத்துக்கு நிலம் வழங்க ஒப்புக்கொண்ட நிலையில் தற்போது திட்டத்தினை மாற்றி எங்களது விளைநிலங்களை முற்றிலும் அழிக்கும் வகையில் நிலம் கையகப்படுத்துவதற்காக ஆயத்தப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. எருமைப்பட்டி (கொங்கணாபுரம் புறவழிச்சாலை) கிராமத்தில் நிலம் மதிப்பு நிர்ணயம் செய்ய நடந்த கூட்டத்தில், நிலம் கையகப்படுத்த ஆட்சேபணை தெரிவித்து மனு கொடுத்தோம்.

ஆனால், நில எடுப்பு சம்பந்தமான அனைத்து பணிகளும் முடிவடையும் நிலையில் உள்ளதால், ஒன்றும் செய்ய இயலாது என மனுவை திரும்ப கொடுத்துவிட்டனர்.

மாநில வளர்ச்சிக்கு நிலத்தை கொடுக்க சம்மதித்த நிலையில், ஏற்கெனவே அறிவித்த வழித்தடத்தில் நெடுஞ்சாலை அமைக்க ஆவண செய்ய வேண்டும். தற்போது, மீதியுள்ள நிலத்தை கையப்படுத்தும் ஆயத்தப்பணியை கைவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT