ஈரோடு மாவட்டத்தில் நடப்பு பருவத்திற்குத் தேவையான உரங்கள் மற்றும் பிற இடுபொருட்கள் போதுமான அளவு இருப்பில் உள்ளது, என வேளாண் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி தெரிவித்தார்.
ஈரோடு மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி தலமையில் காணொலிக் காட்சி மூலம் நடந்தது. ஈரோடு ஆட்சியர் அலுவலகம் மற்றும் 13 ஒன்றியங்கள் மற்றும் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம் என 15 இடங்களில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:
ஈரோடு மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழையளவு 720.48 மிமீ ஆகும். இதுவரை 326.98 மி.மீ பெய்துள்ளது. மாவட்டத்தில் 12 ஆயிரத்து 721 ஹெக்டர் பரப்பில் வேளாண் பயிர்களும், 14247 ஹெக்டர் பரப்பில் தோட்டக்கலை பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
நடப்பாண்டில் நெல் விதைகள் 62 மெட்ரிக் டன்னும், சிறுதானியங்கள் ஒரு மெட்ரிக் டன்னும், பயறு வகைகள் 7 மெட்ரிக் டன்னும், எண்ணெய் வித்துக்கள் 52 மெட்ரிக் டன் விதைகளும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ரசாயன உரங்களான யூரியா 8909 மெட்ரிக் டன், டி.எ.பி 3448 மெட்ரிக் டன், பொட்டாஷ் 4288 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 8399 மெட்ரிக் டன் மற்றும் கலப்பு உரங்கள் 2670 மெட்ரிக் டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
நடப்பு பருவத்திற்குத் தேவையான உரங்கள் மற்றும் பிற இடுபொருட்கள் போதுமான அளவு இருப்பில் உள்ளன.
தற்போது ஈரோடு மாவட்டத்தில் உள்ள தடப்பள்ளி அரக்கன்கோட்டை ஆயக்கட்டு பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட நெல் வளர்ச்சி பருவத்தில் உள்ளதால் பூச்சி நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே வேளாண்மைத்துறை களப்பணியாளர்கள் வயல்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து பாதிப்பு ஏதேனும் இருந்தால், பூச்சிநோய் கட்டுப்பாடு முறைகளை விவசாயிகளுக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், வேளாண் இணை இயக்குநர் சின்னசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.