தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காணொலி காட்சி மூலமாக ஆட்சியர் பா.முருகேஷ் தலைமையில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. 
Regional02

தி.மலை மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் - நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்க வேண்டும் : விவசாய குறைதீர்வு கூட்டத்தில் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு கூட்டம், காணொலி காட்சி மூலமாக நேற்று நடைபெற்றது. ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசும்போது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக எண்ணிக் கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். நீர்வரத்து கால்வாய்கள் மற்றும் ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார வேண்டும். விவசாயத்துக்கு இலவச மின் இணைப்பு வழங்க வேண்டும். தனியார் மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் நிலுவையில் உள்ள தொகையை பெற்றுத்தர வேண்டும். தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் தனி நபர் நகைக் கடன் வழங்க வேண்டும். மணல் கொள்ளையை தடுத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதலாக கால்நடை மருத்துவமனைகளை அமைக்க வேண்டும்” என வலியுறுத்தினர்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி, வேளாண் இணை இயக்குநர் முருகன், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் காமாட்சி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) சத்தியமூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT