திருச்சி மாவட்டம் துறையூர் அருகே சிக்கந்தம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜார்ஜ் (எ) லட்சுமணன் (50). இவரது நண்பர் பாண்டி (எ) இட்லி பாண்டி. திருப்பூரில் 2-ம் தர பனியன் துணி விற்பனையில் ஈடுபட்டு வந்தார். வியாபாரம் தொடர்பாக ஜார்ஜ் (எ) லட்சுமணன் ரூ.ஆயிரத்து 500-ஐ இட்லி பாண்டிக்கு தர வேண்டியிருந்தது. இவர்களது நண்பர்கள் திருப்பூர் கேவிஆர் நகரை சேர்ந்தவர் மாணிக்கம் (47).
அதே பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (37). கடந்த 2017 மே 5-ம் தேதி மாணிக்கம், மாரிமுத்து, ஜார்ஜ் (எ) லட்சுமணன் ஆகியோர், திருப்பூர் கேவிஆர் நகரில் மது அருந்தியுள்ளனர். அப்போது மாணிக்கமும், மாரிமுத்துவும் இட்லி பாண்டிக்கு தர வேண்டிய ரூ.ஆயிரத்து 500 தொடர்பாக ஜார்ஜ் (எ) லட்சுமணனிடம் கேட்டனர்.
இதில் ஏற்பட்ட தகராறில் ஜார்ஜ் (எ) லட்சுமணனை சுத்தியலால் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இருவரையும் திருப்பூர் மத்திய காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு திருப்பூர் 2-வது கூடுத ல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மாணிக்கம், மாரிமுத்து ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து, நீதிபதி அனுராதா தீர்ப்பளித்தார். இதையடுத்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அரசு தரப்பில் வழக்கறிஞர் ப.முருகேசன் ஆஜரானார்.