மேட்டூர் அணைக்கான நீர் வரத்து விநாடிக்கு 11 ஆயிரத்து 794 கனஅடியாக குறைந்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் கர்நாடகாவில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதில், கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து, உபரி நீர் வெளியேற்றப்படுவதால், கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகமாக இருந்தது.
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 14 ஆயிரத்து 514 கனஅடியாக இருந்த நீர் வரத்து, நேற்று 11 ஆயிரத்து 794 கனஅடியாக குறைந்தது. டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக, மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக நீர் வரத்து அதிகமாக இருந்ததால், மேட்டூர் அணையின் நீர் மட்டம் மெல்ல உயர்ந்து வந்தது.
தற்போது, நீர் வரத்து குறைந்ததால் அணையின் நீர் மட்டம் சரியத் தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் 73.51 அடியாக இருந்த நீர் மட்டம் நேற்று 73.47 அடியாக குறைந்தது. நீர் இருப்பு 35.75 டிஎம்சி-யாக உள்ளது.