Regional02

நகைப் பட்டறையில் கொள்ளையடித்தவர் நாமக்கல்லில் கைது :

செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வாரச்சந்தை பகுதியில் தனாஜி என்பவர் நகைப் பட்டறையுடன் கூடிய நகைக் கடை நடத்தி வருகிறார். இந்த நகைப் பட்டறையில் கடந்த 7-ம் தேதி இரவு பூட்டு உடைக்கப்பட்டு, 5 பவுன் தங்க நகை, நாலரை கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ.52,000 ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன. இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், நகைப் பட்டறைகளை குறிவைத்து திருடும் கொள்ளையன் ஒருவன் நாமக்கல்லில் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், முத்துப்பேட்டை போலீஸார் நேற்று முன்தினம் நாமக்கல்லுக்குச் சென்று, சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த வேலாயுதம்(45) என்பவரைப் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், நகை செய்யும் பட்டறைகளுக்கு முன்பு கொட்டிக்கிடக்கும் மணலை சேகரித்து எடுத்துச் செல்லும் தொழிலில் ஈடுபட்டு வரும் வேலாயுதம், தனது கூட்டாளி முருகன் என்பவருடன் சேர்ந்து, முத்துப்பேட்டையில் உள்ள நகைப் பட்டறையில் கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து, வேலாயுதத்தை கைது செய்தனர். முருகன் என்பவரை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT