தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா வரும் 26-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பக்தர்கள் பங்கேற்பு இல்லாமல் விழா நடைபெறும்.
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய 439-வது ஆண்டுபெருவிழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமை வகித்தார். தமிழகசமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மாவட்ட எஸ்பி எஸ்.ஜெயக்குமார், தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆகியோர் பங்கேற்றனர்.
அமைச்சர் பேசியதாவது:
கரோனா ஊரடங்கில் சிலதளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆலயத்தில் அனைத்து வழிபாடுகளும் வழக்கம்போல் நடைபெறும். ஆனால், மக்கள் பங்கேற்க அனுமதியில்லை. நிகழ்ச்சிகள் அனைத்தும் உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் யுடியூப் சேனல் மூலம் ஒளிபரப்பு செய்யப்படும், என்றார் அமைச்சர்.
மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், பனிமயமாதா பேராலய பங்கு தந்தை குமார் ராஜா, ஆலயச் செயலாளர் கென்னடிமற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர், ஆயர் ஸ்டீபன் கூறியதாவது:
தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா வரும் 26-ம் தேதிகொடியேற்றத்துடன் தொடங்கிஆகஸ்ட் 5-ம் தேதி நிறைவடைகிறது. கொடிபவனி, நற்கருணை பவனி,சப்பர பவனி ஆகியவை நடைபெறாது. திருவிழா கடைகள் மற்றும் பொருட்காட்சி ஆகியவையும் இந்த ஆண்டு கிடையாது.
வரும் 26-ம் தேதி காலையில் கொடியேற்றம் மற்றும் திருவிழா நாட்களில் பேராலயத்தின் உள்ளேவழக்கமாக நடைபெறும் நிகழ்ச்சிகள் அனைத்தும், மக்கள் பங்கேற்பின்றி நடைபெறும். திருப்பலி நடைபெறாத நேரத்தில் ஆலயம் திறந்திருக்கும். மக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் தங்களது வழிபாடுகளையும், காணிக்கைகளையும் செலுத்தலாம், என்றார் அவர்.