செங்கம் மில்லத் நகரில் பழமை யான தருமராஜா திரௌபதி அம்மன் கோயிலில் சுற்றுச்சுவர் எழுப்ப எதிர்ப்பு தெரிவித்ததால் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் நேற்று ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மில்லத்நகர் பகுதியில் உள்ள பழமை வாழ்ந்த தருமராஜா திரௌபதி ஆம்மன் கோயிலை சுற்றி ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளன. இதனால், கோயிலுக்கு சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறையின் ஒப்பு தலுடன் பணிகள் தொடங்கப் பட்டுள்ளன. இதற்கு, கோயிலை சுற்றி உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சுற்றுச் சுவர் எழுப்பும் பணி நிறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் கஜேந்திரன் தலைமையிலான குழுவினர் கோயில் வளாகத்தை நேற்று பார்வையிட்டனர். அப்போது, அவர்களிடம் குடியிருப்புகளுக்கு பாதிப்பு இல்லாமல் சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும் எனவும், கோயில் இடத்தில் யாரும் குடியிருக்க வில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர். பின்னர், வருவாய்த் துறையினர் மூலமாக இடத்தை அளவீடு செய்யும் பணி நடைபெற்றது. இருப்பினும், சுற்றுச்சுவர் அமைக்கும் பணி தொடங்கவில்லை.
இது குறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்று, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.