கராத்தே சாம்பியன்ஷிப்-2021 போட்டியில் பங்கேற்கும் அருப்புக்கோட்டை பள்ளி மாணவனுக்கு குடும்பத்தின் நிலையைக் கருத்தில்கொண்டு நிதி உதவி வழங்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சக்திவேல்முருகன்-முத்துரத்தினம் தம்பதிக்கு 6 குழந்தைகள் உள்ளன. அதில் மூத்த மகன் ஹரிஹரபிரசாத் (16). அருப்புக்கோட்டையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவர் மதுரை யாசுகான் கராத்தே பயிற்சி மையத்தில் கடந்த 9 ஆண்டுகளாகப் பயிற்சி பெற்று வருகிறார். மாவட்ட அளவிலான
கராத்தே போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார்.
இந்நிலையில், திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள தமிழ்நாடு அரசு கராத்தே சாம்பியன்-2021 போட்டியில் பங்கேற்கத் தேர்வாகி உள்ளார். மாணவனின் குடும்ப ஏழ்மையை அறிந்த மாவட்ட ஆட்சியர், அருப்புக்கோட்டை வட்டாட்சியர் மூலம் மாணவரின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்து அறிக்கை பெற்றார்.
அதனடிப்படையில், மாணவர் ஹரிஹரபிரசாத் கராத்தே போட்டியில் பங்குபெறுவதற்காக நுழைவுக் கட்டணம், தங்கும் இடம், உணவு மற்றும் பாதுகாப்புக் கவசம் ஆகியவற்றுக்கு ரூ.15 ஆயிரம் தேவைப்படுகிறது என்பதையும் அறிந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ரூ.15 ஆயிரத்துக்கான காசோலையை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி வழங்கினார்.
மேலும், மாணவர் ஹரிஹரபிரசாத் கராத்தே பயிற்சிக்கான நேரம் தவிர மற்ற நேரங்களைத் திட்டமிட்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.