திமுகவில் சேருமாறு அதிமுகவினரை மிரட்டி வரும் தோப்பு வெங்கடாசலத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெருந்துறை தொகுதி அதிமுக எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார் புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக பெருந்துறை டிஎஸ்பி அலுவலகத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் எம்எல்ஏ ஜெயக்குமார் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
பெருந்துறையைச் சேர்ந்த தோப்பு வெங்கடாசலம் கடந்த ஜூலை 11-ம் தேதி தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டதாகவும், அவருடன் 852 அதிமுகவினர் இணைந்தனர் என்றும் தெரிவித்துள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள், கிளைக் கழகச் செயலாளர்கள், வார்டு செயலாளர்கள் ஆகியோரின் அனுமதி இல்லாமலேயே அவர்களின் பெயரை திமுகவில் இணைந்ததாக தோப்பு வெங்கடாசலம் வெளியிட்டுள்ளார்.
பொய்யான செய்திகளை அளித்துவரும் திமுக உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் மீது, கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களின் அறிவுறுத்தலின்படி சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இந்நிலையில், திமுகவில் உறுப்பினராகச் சேருமாறு, அதிமுகவினரை தோப்பு வெங்கடாசலம் நேரிலும், போனிலும் மிரட்டி வருகிறார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் திமுக உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் முழு பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தோப்பு வெங்கடாசலம் மறுப்பு
தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், என் தலைமையில் திமுகவில் இணைந்தவர்கள் பெயர், முகவரி, தொலைபேசியுடன் கூடிய பட்டியல் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. அதன் பிறகு, தினந்தோறும் பலர் அதிமுகவில் இருந்து விலகி, திமுகவில் இணைந்து வருகின்றனர். நான் யாரையும் மிரட்டியோ, வற்புறுத்தியோ கட்சியில் சேர்க்கவில்லை.
கடந்த 10 ஆண்டுகளாக நான் எம்எல்ஏவாகவும், அமைச்ச ராகவும் இருந்துள்ளேன். அப்போது நான் செய்த பணிகளால் பயன்பெற்றவர்கள், தற்போதைய திமுக ஆட்சி, முதல்வரின் செயல்பாட்டால் ஈர்க்கப்பட்டவர்கள், தாங்களாக விருப்பப்பட்டு திமுகவில் இணைகின்றனர். இதை விடுத்து மிரட்டி கட்சியில் சேர்க்கிறார்கள் என்ற ஆதாரமற்ற புகாரை அளித்துள்ளனர். இப்படியான என் மீதான புகார் நகைப்புக்கு உரியது, என்றார்.