Regional02

சேலத்தில் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் தர்ணா :

செய்திப்பிரிவு

வட்டாட்சியரைக் கண்டித்து, சேலம் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மணியனூரில் சேலம் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் நேற்று திடீரென வட்டாட்சியர் அலுவலக வாயில் அருகே தரையில் அமர்ந்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மாவட்ட தலைவர் வள்ளி தேவி, செயலாளர் அர்த்தனாரி ஆகியோர் தலைமையில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, “சேலம் தெற்குவட்டாட்சியர், ஊழியர் விரோதப்போக்கை கடைபிடிக்கிறார். ஊழியர்களை மரியாதையின்றி பேசுகிறார். இரவுப்பணி பார்ப்பவர்களுக்கு மறுநாள் விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதி உள்ளது. ஆனால், இரவுப் பணி பார்த்தவர்களை பணிக்கு வர கட்டாயப்படுத்துகிறார். அலுவலகத்தில் இடைத்தரகர்கள் ஆதிக்கம் அதிகரித்துள்ளது” என்றனர்.

இதனிடையே, சேலம் கோட்டாட்சியர் விஷ்ணுவர்த்தினி, அங்கு வந்து தர்ணாவில் ஈடுபட்ட ஊழியர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதையடுத்து, ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். மேலும், இதுதொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார்.

SCROLL FOR NEXT