திருநெல்வேலி மேலப்பாளைய த்தில் 2 மாதங்களுக்குப்பின் கால்நடை சந்தை நேற்று மீண்டும் கூடியது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை சூடுபிடித்திருந்தது.
பிரசித்தி பெற்ற இந்த சந்தை செவ்வாய்க்கிழமைகளில் கூடும். பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடு, மாடுகள், கோழிகள் மற்றும் கருவாடு கொண்டுவரப்பட்டு விற்பனை நடைபெறும். அவற்றை வாங்க ஏராளமானோர் சந்தைக்கு வருவர்.
கரோனா ஊரடங்கு காரண மாக கடந்த 2 மாதங்களாக சந்தை மூடப்பட்டிருந்தது. பக்ரீத் பண் டிகையை முன்னிட்டு கடந்த 2 வாரங்களாக சந்தையை சுற்றியுள்ள பகுதிகளில் தடையை மீறி கால்நடைகள் விற்பனை நடைபெற்றது. சந்தையை திறக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி கால்நடைச் சந்தை நேற்று திறக்கப்பட்டது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் ஆடு, மாடுகளை கொண்டு வந்திருந்தனர். சந்தையையொட்டிய நேதாஜி சாலை, மேலப்பாளையம் சக்திநகர் பகுதிகளில் கோழிகள் மற்றும் மீன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
சந்தைக்குள் சென்றவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக் கப்பட்டது. முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும் ஏராளமானோர் ஒரே நேரத்தில் சந்தைக்குள் திரண்டதால் சமூகஇடைவெளி கேள்விக்குறியானது. சந்தையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.